ஊழலை எதிர்க்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 115 ஆவது இடத்தில் உள்ளது.
உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டின் (Global Corruption Index ) 2023 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை, டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு வெளியிட்டுள்ளது.
இவ்வமைப்பு கடந்த 30 ஆண்டுகளாக, ‘சட்டத்தின்படி ஆட்சி செய்து ஊழலை எதிர்த்துப் போராடும்” நாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு ஊழல் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
ஊழலற்ற நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில் உலக நாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும். 100 மதிப்பெண்களுக்கு நாடுகள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் அவற்றின் வரிசை அமைகிறது.
2023 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் மொத்தம் 180 நாடுகள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 180 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வில், ஆஸ்திரேலியா 100 இற்கு 75 புள்ளிகளைப் பெற்று, 14 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
குறித்த பட்டியலில் 90 மதிப்பெண்கள் பெற்ற டென்மார்க், தொடர்ந்து 6-வது ஆண்டாக ஊழலை எதிர்க்கும் முதல் நாடாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து, 87 மதிப்பெண்களுடன் பின்லாந்து இரண்டாவது இடத்தையும், 85 மதிப்பெண்களுடன் நியூசிலாந்து மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
நோர்வே, சிங்கப்பூர், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, லக்ஸம்போர்க் நாடுகள் ஊழலை எதிர்க்கும் நாடுகளில் டாப் 10 வரிசையில் உள்ளன. அமெரிக்கா 69வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் சோமாலியா கடைசி இடத்தில் இருக்கிறது.










