” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைப்பதற்காக என்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு சிலர் முயற்படுகின்றனர்.” – என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர.
சுதந்திரக்கட்சியின் 72 ஆவது ஆண்டுவிழா நிகழ்வு தொடர்பில் கட்சி தலைமையகத்தில் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே தயாசிறி ஜயசேகர இவ்வாறு கூறினார்.
” செயலாளர் பதவி தொடர்பில் அச்சுறுத்தல் நிலை காணப்படுகின்றது. இது விடயம் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் நிறைவேற்குழுவுக்கே இருக்கின்றது. நிறைவேற்றுக்குழு தீர்மானித்தால் விடைபெற நான் தயார். ஆனால் கட்சியை விட்டு செல்லமாட்டேன்.
என்னை நீக்குவதற்கு மேல் மட்டத்தில் இருந்துதான் சூழ்ச்சி இருக்கின்றது. அப்போதுதான் கட்சியை ஐக்கிய தேசியக்கட்சியுடன் இவர்களுக்கு இணைக்க முடியும்.
அடுத்த பொதுத்தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிட வேண்டும் என கட்சி அமைப்பாளர்கள் தீர்மானித்துள்ளனர்.” – எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.










