பாலிவுட் நடிகை ரியா சக்ரபர்த்தி மீது சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த மாதம் 14ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் குறித்து மும்பை பந்த்ரா பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் சுஷாந்தின் காதலியான பாலிவுட் நடிகை ரியா சக்ரபர்த்தி மீது பாட்னா போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரியா மீது சுஷாந்தின் அப்பா கிருஷ்ண குமார் சிங் தான் புகார் அளித்துள்ளார். ரியா பற்றி சுஷாந்தின் அப்பா கூறியிருப்பதாவது,
ரியாவும், அவரின் குடும்பத்தாரும் சேர்ந்து என் மகன் சுஷாந்தை நன்றாக பயன்படுத்திக் கொண்டனர். என் மகனின் பணத்தை சுரண்டிக் கொண்டனர். மேலும் ரியா சுஷாந்தை எங்களிடம் இருந்து பிரித்துவிட்டார். சுஷாந்தை மனதளவில் டார்ச்சர் செய்திருக்கிறார் ரியா. சுஷாந்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 15 கோடி பணம் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளது. சுஷாந்த இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ரியா அவர் வீட்டிற்கு வந்து லேப்டாப், ஏடிஎம் கார்டு, முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளார். சுஷாந்தை ரியா தான் தற்கொலைக்கு தூண்டினார் என்று தெரிவித்துள்ளார்.
ரியா மற்றும் அவரின் குடும்பத்தார் உள்பட 6 பேரின் பெயர்களை கிருஷ்ண குமார் சிங் தன் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்த 4 போலீசார் அடங்கிய குழு பாட்னாவில் இருந்து மும்பைக்கு கிளம்பிச் சென்றுள்ளது.
சுஷாந்த் குடும்பத்தார் தற்போது தான் முதல் முறையாக புகார் தெரிவித்துள்ளனர்.
லாக்டவுன் அமல்படுத்தப்படுபவதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி ரியா சுஷாந்துக்கு நம்பிக்கையான பாதுகாவலரை வேலையில் இருந்து நீக்கினார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக ரியா சுஷாந்தின் ஏடிஎம் கார்டை தான் பயன்படுத்தி வந்தாராம். விளம்பர நிகழ்ச்சியில் நடிக்க ரியா ஐரோப்பாவுக்கு சென்றபோது விமான டிக்கெட்டுகளை தவிர மற்ற அனைத்து செலவுகளையும் சுஷாந்த் தான் செய்தாராம்.
கடந்த ஓராண்டில் சுஷாந்த் தன் தந்தையுடன் 5 முறை தான் பேசியிருக்கிறார். ரியா தான் சுஷாந்தை தன் தந்தையுடன் பேசவிடாமல் செய்தார் என்று புகார் எழுந்துள்ளது. மேலும் மும்பையில் வசிக்கும் சுஷாந்தின் அக்காவுடன் ரியா பலமுறை சண்டை போட்டிருக்கிறாராம்.
சுஷாந்த் மன அழுத்தத்தால் அவதிப்பட்டதை ரியா அவரின் குடும்பத்தாரிடம் தெரிவிக்காமல் இருந்தாராம்.
முன்னதாக ரியா சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார். அதை பார்த்த சுஷாந்தின் ரசிகர்கள், அவர் உயிருடன் இருக்கும்போது காதலை ஒப்புக் கொள்ளாமல், இறந்த பிறகு காதலி என்று கூறி விளம்பரம் தேடுகிறார் என்று கூறி ரியாவை விளாசினார்கள்.
சுஷாந்த் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் அவரின் ரசிகர்கள் எனக்கு கொலை மிரட்டலும், பலாத்கார மிரட்டலும் விடுக்கிறார்கள் என்று புகார் தெரிவித்தார் ரியா.
சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அது குறித்து ரியா பிரபல இயக்குநர் மகேஷ் பட்டிடம் தெரிவித்தபோது அவர் சுஷாந்த் பர்வீன் பாபி போன்று ஆகிறார் என்று கூறியதாக செய்திகள் வெளியாகின. சுஷாந்துக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் அதை அவரின் குடும்பத்தாரிடம் கூறாமல் மகேஷ் பட்டிடம் ஏன் ரியா கூற வேண்டும் என்று கேள்வி எழுந்தது.
இந்நிலையில் சுஷாந்தின் மரணம் தொடர்பாக மகேஷ் பட், பாலிவுட் இயக்குநர்கள் முகேஷ் சப்ரா, சஞ்சய் லீலா பன்சாலி, சேகர் கபூர், ஆதித்யா சோப்ரா உள்பட 40 பேரிடம் போலீசார் இதுவரை விசாரணை நடத்தியுள்ளனர்.
நான் ஏன் சுஷாந்துக்கு நியாயம் கேட்கிறேன்?: கங்கனா ரனாவத் விளக்கம்
இதற்கிடையே கங்கனா ரனாவத் சுஷாந்தின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று கூறி வருகிறார்.
– நன்றி சமயம்.கொம்