எரிபொருள் கப்பல்கள் இலங்கை வரும் தினங்கள்-எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

லங்கா IOC நிறுவனத்திற்கு 11 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ஜூலை மாதம் 22 அல்லது 23ஆம் திகதியளவில் இந்தியாவின் கடனுதவித் திட்டத்தின் கீழ் பெற்றோல் கப்பலொன்று இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், கொரல் நிறுவனத்திடமிருந்து டீசல் கப்பலொன்று ஜூலை 5ஆம் திகதி இந்தியாவில் இருந்து புறப்படும் எனவும், அது ஜூலை 8 அல்லது 9ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த கப்பல் 40,000 மெற்றிக் தொன் டீசலுடன் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு மேலதிகமாக விட்டோல் டீசல் கப்பல் ஜூலை 11 முதல் 14ஆம் திகதிகளுக்கு இடையில் நாட்டை வந்தடையவுள்ளதோடு, இந்தியாவின் IOC நிறுவனத்தின் ஊடாக டீசல் கப்பலொன்று 15 மற்றும் 17ஆம் திகதியளவில் நாட்டை வந்தடையும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

நாடு முழுவதும் தற்போது பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஜூலை 10ஆம் திகதிக்கு முன்னதாக பெற்றோல் கப்பலொன்றை பெற்றுக்கொள்வதற்காக 3 புதிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக தெரிவித்த அமைச்சர் காஞ்சன, மலேசிய அரசாங்கத்துடனும் பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வது குறித்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles