“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி வைத்தமையும் பிரதான ஒரு காரணமாகும்.” – என்று மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஜனாதிபதி தேர்தலின்போது எமக்கு பின்னடைவு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு வைத்தமை அதில் பிரதான ஒரு காரணமாகும். எனினும், அப்போதைய அரசியல் சூழ்நிலையில் நாட்டின் நலன்கருதி எடுக்கப்பட வேண்டிய சிறந்த முடிவாகவும் அத்தீர்மானமே இருந்தது. கட்சி, கொள்கை என்பதைவிட நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்தோம்.
அத்துடன், எமது கட்சியில் இருந்த சிரேஷ்ட உறுப்பினர்களும் சென்றனர். பொருத்தமற்ற திருமண பந்தத்தில் இணைந்தால், உறவுகளையும் இழக்க நேரிடும், குடும்பமும் இல்லாமல்போகும். அப்படிதான் எமக்கு நடந்தது.
எது எப்படி இருந்தாலும் கட்சியின் கொள்கைக்காக ஜனாதிபதி தேர்தலில் நாம் தனித்து களமிறங்கினோம். தேர்தல் பெறுபேறு என்னவாக இருந்தாலும் கட்சியின் கருத்தியலை பாதுகாக்க முடிந்தமை வெற்றியாகும்.” – என்றார்.










