ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டில் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களுக்கு உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படாமை கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று நடைபெற்றது.
“ஸ்மார்ட் நாடு – 2048ஐ வெல்வோம்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில், திருத்தப்பட்ட கட்சியின் புதிய யாப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டில் வரவேற்புரையை கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க ஆற்றினார். மாநாட்டு கூட்ட யோசனைய அறிவித்து செயலாளர் பாலித ரங்கே பண்டார உரையாற்றினார்.
அத்துடன் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, தவிசாளர் வஜிர அபேவர்தன, உப தலைவர் அகில விராஜ் காரியவசம், தேசிய அமைப்பாளர் சாகல ரத்னாயக்க ஆகியோருக்கும் உரையாற்ற நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் வந்த அமைச்சர்களான மனுச நாணயக்கார, ஹரின் பெர்ணான்டோ ஆகியோரும் மாநாட்டில் உரையாற்றினர்.
எனினும், தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்கள் உரையாற்றவில்லை.
வழமையாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக்கூட்டம், மாநாடுகளில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு உரையாற்ற வாய்ப்பளிக்கப்படும். ஆனால் இந்த கூட்டத்தில் நேரம் வழங்கப்படவில்லை. குறைந்தபட்சம் தமிழ்மொழியில் உரையாற்றக்கூடிய ஒருவருக்காவது வாய்ப்பளித்திருக்கலாம் என கட்சி செயற்பாட்டாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்ககூடிய கட்சிதான் ஐக்கிய தேசியக் கட்சி, அதன் தலைவர் தற்போதைய ஜனாதிபதி முற்போக்கு சிந்தனை உடையவர், அப்படி இருக்கையில் தமிழ் பேசும் மக்களுக்கான நேரம் ஒதுக்கப்படாமை வேதனையளிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.










