கொரோனாவிலும் அரசியல் நடந்தும் இந்த அரசு, தனிமைப்படுத்தல் நடவடிக்கையைக்கூட ஒடுக்குமுறை செயற்பாடாக கையாண்டுவருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ கொரோனா நெருக்கடி ஒருபுறம், பொருளாதார சிக்கல் மறுபுறம். இன்று பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டாலும் அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவும் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. கப்பல் பற்றி எரிந்ததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நஷ்டஈட்டை பெறுவதற்காக சுற்றுச்சூழலை நாசமாக்கியுள்ளனர். விவசாயிகளுக்கு உரமும் இல்லை.
தடுப்பூசி திட்டமும் முறையாக முன்னெடுக்கப்படுவதில்லை. துறைமுக நகரத்தை சீனாவுக்கு ஏற்றவகையில் செயற்படுத்துவதற்கு அனுமதி வழங்கியதாலேயே தடுப்பூசி வழங்குவதில் இந்தியா இழுத்தடிப்பு செய்துவருகின்றது என நம்புகின்றோம். அமெரிக்காவையும் பகைத்துக்கொண்டுள்ளோம்.
எரிபொருட்களின் விலை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. 2020 இல் எரிபொருள்மூலம் அரசுக்கு உச்ச இலாபம் கிடைத்தது. நிதியம் உருவாக்கப்படும் என கூறப்பட்டது. அதற்கு என்ன நடந்தது என தெரியவில்லை.
இதற்கிடையில் இலவசக்கல்வியை தனியார் மயப்படுத்துவது மட்டுமல்ல தற்போது இராணுவ மயப்படுத்துவதற்கான திட்டமும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ வழியில்லை. இவற்றுக்கு எதிராக போராடுபவர்கள் கைது செய்யப்படுகின்றனர். தனிமைப்படுத்தல் நடவடிக்கை அடக்குமுறை செயற்பாடாக மாறியுள்ளது. கொரோனாவுக்குள் என்னவெல்லாம் செய்யலாமோ, அவற்றையெல்லாம் அரசு செய்கின்றது.” – என்றார்.
