ஒருநாள் தொடரையும் கைப்பற்றுமா இந்தியா? 2 ஆவது போட்டி இன்று!

இந்தியாவுடனான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 67 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த நிலையில் இன்று (12) தீர்க்கமான இரண்டாவது போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று பி.ப. 1.30க்கு ஆரம்பமாகும் இந்தப் போட்டி இலங்கை அணிக்கு கட்டாயம் வெற்றிபெற வேண்டிய ஆட்டமாக மாறியுள்ளது. மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1–0 என முன்னிலை பெற்றுள்ளது.

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி துடுப்பாட்டத்தில் இலங்கை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்ததோடு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் துடுப்பாட்டமும் எதிரணிக்கு சவால் விடுப்பதாக அமையவில்லை.

ஆரம்ப வீரர் பத்தும் நிசங்க (72) மற்றும் அணித்தலைவர் தசுன் ஷானக்க (ஆட்டமிழக்காது 108) துடுப்பாட்டத்தில் சோபித்தபோதும் இலங்கை அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் ஆட்டத்தின் பாதியிலேயே போட்டியை கைவிட்டது போன்று மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

எனினும் இன்றைய போட்டியில் இலங்கை துடுப்பாட்ட வரிசையில் மாற்றங்கள் செய்ய குறைவான வாய்ப்பே உள்ளது. ஆனால் பந்துவீச்சில் சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.

இன்றைய போட்டி நடைபெறும் சிறிய பெளண்டரி கொண்ட ஈடன் கார்டன் துடுப்பாட்டத்திற்கு சாதகமானதாகும். இங்கு சுழற்பந்து வீச்சாளர்களும் சோபித்து வருகின்றனர். எவ்வாறாயினும், கடைசியாக நடந்த சில போட்டிகளை பார்க்கும்போது இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் உதவுவதாக உள்ளது.

சூரிய மறைவுக்குப் பின்னரான பனி மூட்டம் ஈடன் கார்டனிலும் தாக்கம் செலுத்தும் ஒன்றாக உள்ளது. எனவே நாணய சுழற்சி முக்கியமாகும். பெரும்பாலும் நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சையே தேர்வு செய்யும்.

Related Articles

Latest Articles