அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.
பிரான்சில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மட்டும் 2 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்றுறுதியானது.
கடந்த டிசம்பர் 22ஆம் திகதி தொடக்கம் உலகளவில் தினமும் 9 இலட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா அதிகரித்து வருகிறது. பிரான்சில் நேற்று முன்தினம் (28) 1,80,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், நேற்று 2 இலட்சத்து 8,000 பேருக்கு உறுதியாகி உள்ளது.
இது குறித்து கவலை வெளியிட்டுள்ள அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஆலிவர் வெரன், ஒவ்வொரு வினாடிக்கும் 2 பேருக்கு தொற்று உறுதியாகிறது. மருத்துவமனைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. வெளியில் வரும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். ஒமிக்ரொன் பரவலை அலை எனக்கூறுவதை விட ஆழிப்பேரலையாக உள்ளது எனலாம் என்றார்.
பிரான்ஸ் தவிர்த்து, பிரித்தானியா, இத்தாலி, ஸ்பெய்ன், போர்த்துக்கல், கிரீஸ், சைப்ரஸ், மால்டா ஆகிய நாடுகளிலும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது.
முன்பு அந்நாட்டில் 2,50,000 பேர் அதிகபட்சமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று 2,65,000 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இந்த எண்ணிக்கை எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட நினைத்த அமெரிக்கர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா காரணமாக ஊழியர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவிலும், இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று 18,300 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். முன்பு அதிகபட்சமாக 11,300 பேர் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர்.
அதேபோல், இத்தாலியிலும் முன்னதாக ஒரே நாளில் 78,313 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி வந்தனர். ஆனால், நேற்று 98,030 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். பிரித்தானியாவில் ஒரே நாளில் 1,83,037 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளனர். லண்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதம் 53 சதவீதம் அதிகரித்துள்ளது. பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்கள் பெரும்பாலும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.