” கஞ்சா வளர்ப்புக்கு அனுமதி வழங்கினால் நாளை விபச்சாரத்துக்கும் சட்ட அங்கீகாரம் கோருவார்கள். எனவே, கலாச்சாரத்துக்கு விரோதமான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கக்கூடாது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கஞ்சா வளர்ப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என இந்த உயரிய சபையில் பெண் எம்.பியொருவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். இப்படியானவர்கள் நாளை விபச்சாரத்துக்கும் சட்ட அனுமதி கோருவார்கள். அந்நிய செலாவணிக்காக இப்படியான நடவடிக்கைகள் இடம்பெறக்கூடாது. பணத்துக்கு பணிந்து எமது கலாச்சாரத்துக்கு எதிரான விடயங்களை செய்யவேக்கூடாது.
இன்று விவசாயம் அழிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளை கஞ்சா வளர்ப்பு நோக்கி நகர்த்துவதற்கான பின்னணியா தற்போது உருவாக்கப்பட்டுவருகின்றது என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது. எனவே, இவ்வாறான பொறிக்குள் – பிடிக்குள் சிக்க வேண்டாம் என விவசாயிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். எமது ஆட்சியின்கீழ் நிச்சயம் அவை தடுத்து நிறுத்தப்படும்.” -என்றார்.










