கடல் அலையின் முகத்தை புகைப்படம் எடுத்த லண்டன் கலைஞர்!

ஒரு நிகழ்வையோ, நபரையோ படம் பிடிக்க வேண்டும் என்பதற்காக புகைப்பட கலைஞர்கள் மேற்கொள்ளும் மெனக்கெடல்கள் வார்த்தைகளை எளிதாக சொல்லிவிட முடியாது. குறிப்பாக வன விலங்குகள், இயற்கை நிகழ்வுகள் அல்லது இயற்கையின் அழகை போட்டோவாக எடுப்பது சற்று சவால் நிறைந்த பணியாகவே இருக்கும்.

இந்த மணிக்கணக்கில் காத்திருப்பதும் முக்கியத்துவமானதாக இருக்கும். ஏனெனில் தக்க சமயம் வரும் வரை பொறுமையுடன் காத்திருந்து அதனை படம் பிடித்து சாதித்தும் காட்டுவார்கள். அந்த வகையில் இயற்கையின் ஓர் அங்கமான கடல் அலைகளை போட்டோ எடுக்க லண்டனை சேர்ந்த போட்டோகிராஃபர் ஒருவர் கிட்டத்தட்ட 12 மணிநேரம் காத்திருந்தது தெரிய வந்துள்ளது.

வெறும் கடல் அலைகளை எடுப்பதற்காக எதற்கு இத்தனை மணிநேரம் காத்திருக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். ஆனால், அதை வெறும் கடல் அலையாக மட்டும் எடுக்காமல் அலைகள் பொங்கியெழுந்து தணியும் போது வருவதை போட்டோவாக பதிவு செய்திருக்கிறார் இயன் ஸ்ப்ரோட்.

இங்கிலாந்தின் சண்டெர்லேண்ட் பகுதியில் உள்ள கடற்கரையின் ரோகர் பையர் கலங்கரை விளக்கத்தில் கடல் அலைகள் சீராக பாய்ந்து வந்து செல்வதைதான் துல்லியமாக படம் பிடித்திருக்கிறது இயன் ஸ்ப்ரோட். அதன்படி கடல் அலைகள் கலங்கரை விளக்கத்தின் உச்சி வரை பட்டு தெறித்து விழும் போது முகத்தோற்றம் போன்ற அமைப்புடன் இருப்பதைத்தான் இயன் போட்டோ எடுத்திருக்கிறார்கள்.

இதற்கு 12 மணிநேரம் காத்திருந்து 4,000 போட்டோக்களை எடுத்து அந்த முகத் தோற்றம் கொண்ட அலைகளைப் பதிவு செய்திருக்கிறார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்திருக்கும் ஐயன், “அலைகளில் முகங்கள். இது தண்ணீரின் கடவுளாகவும் இருக்கலாம் அல்லது நம் அன்புக்குரிய ராணி எலிசபெத்தாகவும் இருக்கலாம்” என கேப்ஷனிட்டுள்ளார்.

இயனின் இந்த முகத்தோற்றம் கொண்ட கடல் அலைகளின் புகைப்படங்களை கண்ட இணைய வாசிகள் கமென்ட் செக்ஷனில் படையெடுத்து தத்தம் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதில் சிலர் நம்பவே முடியாத அளவுக்கு தத்ரூபமாக இருக்கிறது என்றெல்லாம் பதிவிட்டிருக்கிறார்கள். அதேவேளையில், கண்டிப்பாக எடிட் செய்யப்பட்ட போட்டோவாக இருக்கும் என்றும் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

 

https://www.instagram.com/p/CpK5PB9IUT3/?utm_source=ig_web_copy_link

Related Articles

Latest Articles