குருணாகலை, ஹெட்டிபொலவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72வது மாநாட்டை கொழும்பில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள விவகாரம் கட்சிகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சு.கவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர, இந்த தீர்மானத்திற்கு போர்க்கொடி தூக்கியுள்ளார் என தெரியவருகின்றது.
சு.கவின் வருடாந்த மாநாட்டை எதிர்வரும் 2ஆம் திகதி ஹெட்டிபொலவில் நடத்துவதற்கு முதலில் தீர்மானிக்கப்பட்டது. எனினும், குறித்த தீர்மானம் திடீரென மாற்றப்பட்டு, செப்டம்பர் 3ஆம் திகதி கொழும்பில் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அரசில் அங்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பி.க்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே கொழும்பில் மாநாட்டை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெறும் மாநாட்டுக்கு தயாசிறி அணி செல்லாது என தெரியவருகின்றது. சிலவேளை கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் மாற்றம் வரக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சு.கவின் தலைவரான மைத்திரிபால சிறிசேன, அரச தரப்பில் உள்ள சு.கவினருடன் தற்போது நெருக்கமாக செயற்பட்டுவருகின்றார்.
