கண்டியில் உள்ள காணிகளை அங்குள்ள மக்களுக்கு வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனை கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த யோசனையை பிரஜா சக்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள் சாமி முன்வைத்துள்ளார்.
கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே மற்றும் கண்டி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தலைவர் வசந்த யாப்பா பண்டார தலைமையில் கண்டி கச்சேரியில் இடம்பெற்றது.
இதில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினை பிரதிநிதித்துவப்படுத்தியும் கண்டி மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தியும் பிரஜா சக்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி கலந்து கொண்டார்.
இதன் போது, மெததும்பர, பிரதேச செயலாளர் பிரிவிற்குள் வருவதற்கும் வுட்சைட் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலுள்ள அரச பெருந்தோட்ட யாக்கத்துக்கு சொந்தமான காணிகளை விலைமனு கோரல் மூலம் வெளியாட்களுக்கு கொடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அக் காணிகளை அங்குள்ள எமது மக்களுக்கு வழங்குமாறு கோரி பாரத் அருள்சாமியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஏற்கனவே கடந்த காலங்களில் தயாரிக்கப்பட்ட பெயர் பட்டியல் நிகாரிக்கப்பட்டு அங்குள்ள மக்களுக்கு வழங்குவதற்கு அப் பகுதி பிரதேச செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
கண்டி தமிழ் மக்களுக்கும் தோட்ட மற்றும் கிராம பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கும் இந்த ஒருங்கிணைப்பு குழுவின் ஊடாக சேவைகளை வழங்குவதற்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் இணைந்து நாங்கள் முன்னின்று செயற்படுவோம் என்று பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கண்டி மாவட்டத்தில் தோட்ட காணிகளை வெளியாருக்கு வழங்க தோட்ட வீடமைப்பு, சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சு முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேகுமார் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தோட்ட காணிகளை வெளியாருக்கு பகிர்ந்தளிக்க முயற்சியென வேலுகுமார் காட்டம்! ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முறுகலா?