மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வலியுறுத்தினார்.
கண்டியில் இன்று (15.08.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ கண்டி, குண்டசாலை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் வாழும் மக்களுக்கு 2021 ஜுன் முதல் வாரத்தில் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் – பை
( Sputnik V )தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டது. அவ்வாறு முதலாவது டோஸ் வழங்கப்பட்டு தற்போது 75 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் 2ஆவது டோஸ் வழங்கப்படவில்லை.
முதலாவது டோஸ் வழங்கப்பட்டு மூன்று வாரங்களில் 2ஆவது டோசும் வழங்கப்பட வேண்டும் என்பதே சுகாதார துறையின் பரிந்துரையாகும். துறைசார் நிபுணர்களும் இவ்விடத்தை சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, காலம் தாழ்த்தி 2ஆவது டோஸை வழங்குவதில் பயன் இல்லை. அதுமட்டுமல்ல முதலாவது தடுப்பூசி ஊடாக கிடைக்கப்பெறும் சுகாதார பாதுகாப்பும் பயனற்றுபோகும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.
குண்டசாலை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மக்கள் சுகாதார ரீதியில் அநாதரவாக்கப்பட்டுள்ளமைக்கான முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும். அம்மக்களுக்கு இனியும் காலம் தாழ்த்தாது ஸ்புட்னிக் பை தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். காலம் கடந்துள்ளதால் அதற்கான மாற்றுவழி என்னவென்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
கண்டி மாவட்டத்தில் தடுப்பூசி ஏற்றும்போது மக்களிடம் பலவந்தமாக கையொப்பம் பெறப்பட்டது. எனவே, இதன் பின்னணியில் சூழ்ச்சித் திட்டம் ஏதும் உள்ளதா அல்லது கண்டி மாவட்ட மக்கள் ஆய்வுக்கூடமாக பயன்படுத்தப்பட்டனரா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்தும் உரிய விளக்கம் அவசியம்.
அதேவேளை, துரித கதியில் தடுப்பூசி ஏற்றப்படுகின்றது என ஆளுந்தரப்பு பிரச்சாரம் முன்னெடுத்தாலும் கொழும்பு மாவட்டத்தில் மட்டுமே அவ்வாறு நடைபெறுகின்றது. ஏனைய பகுதிகளில் தடுப்பூசி பெறுவதற்கு மக்கள் ஆர்வமாக இருந்தாலும் உரிய பொறிமுறை இல்லை. எனவே, எல்லா பகுதிகளிலும் சமாந்தரமான முறையில் தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுக்கின்றோம்.” – என்றார்.










