கண்டி மாவட்டத்தில் முதன் முறையாக போட்டியிட்ட எனக்கு எவ்வித மத, இன பேதங்களுமின்றி என் மீது நம்பிக்கை வைத்து ஒரே மாதத்தில் 23000 இற்கு அதிகமான வாக்குகளை அளித்த அனைத்து மக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
“இது கண்டி மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான வெற்றி. கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவாகாத போதிலும் போதிலும் 2/3 பெரும்பான்மைக் கொண்ட எங்களுடைய அரசாங்கத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அங்கம் வகிப்பதால் அவரின் ஊடாக கண்டியில் நான் முன் வைத்த அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் முறையாக முன்னெடுக்கப்படும்.
அரசாங்கத்தின் சார்பில் கண்டியில் போட்டியிட்ட எனக்கு மக்களின் பேரதரவு கிடைத்துள்ள போதிலும் கண்டி வாழ் தமிழ் பேசும் மக்கள் எதிர்க் கட்சியின் மீது அதிக நம்பிக்கை வைத்து எதிர்கட்சியில் ஒரு பிரதிநிதியை பாராளுமன்றம் அனுப்பியிருந்தாலும் அவரினால் கண்டியில் இனி வரும் காலங்களில் எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்பதை மக்களுடன் இணைந்து நாங்கள் தொடர்ந்து அவதானிப்போம்.
எவ்வாறாயின் நான் பாராளுமன்ற வேட்பாளராக நான் முன்வைத்த அனைத்து செயற்பாடுகளையும் என்னை நம்பி வாக்களித்த மக்கள் ஊடாக அனைத்து கண்டி வாழ் மக்களுக்காக நிறைவேற்றுவேன்.
இனிவரும் காலங்களில் கண்டியில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டமாக இருக்கட்டும் அல்லது அபிவிருத்தித்திட்டங்களாக இருக்கட்டும் அனைத்தும் எங்களின் ஊடாக சிறப்பாக முன்னெடுப்போம்.
கண்டியில் இதுவரை காணப்பட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தேர்தலின் ஊடாக மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதால் கண்டி வாழ் மக்களுக்கான அனைத்து உரிமைகள் மற்றும் வசதிகளையும் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொடுக்க தயார் நிலையில் உள்ளோம்.
கண்டியில் நான் புதுமுகமாக இருந்த போதிலும் என் மீது அதீத நம்பிக்கைக் கொண்டுள்ள கண்டி வாழ் மக்களுக்கு இனி வரும் காலங்களிலும் நான் தொடர்ந்து நம்பிக்கையுடன் சேவையாற்றுவேன்.” – என்றார்.
க.கிசாந்தன்