கண்டி, வவுனியா, மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களில் நாளை 4ஆம் திகதி முதல் கடவுச் சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவை ஆரம்பிக்கப்படும் என்று குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆரம்பகட்டமாக நாளொன்றுக்கு 100 விண்ணப்பதாரிகளுக்கு கடவுச் சீட்டுகளை வழங்கும் ஒருநாள் சேவை முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தில் ஒருநாள் சேவைக்காக பதிவு செய்துகொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் எனவே, புதிய விண்ணப்பதாரிகள் அலுவலகத்திற்கு வருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைமை அலுவலகத்தில் ஒருநாள் சேவையைப் பெறுவதற்காக விண்ணப்பித்தவர்கள், தமக்கு ஒதுக்கப்பட்ட நாளின் விபரங்களை 0706311711 என்ற வட்ஸ்ஆப் செயலிக்கு அனுப்பி, பிராந்திய அலுவலகங்களில் தம்மை பதிவு செய்து, துரிதமாக கடவுச் சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் ஒருநாள் சேவையில் கடவுச் சீட்டைப் பெறுவதற்கு மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதுடன், இணையத்தளம் மூலம் முன்பதிவு செய்துகொள்பவர்களுக்கு சுமார் 45 நாட்களின் பின்னரே அவர்களுக்கு முன்பதிவு செய்துகொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவையை ஆரம்பிப்பதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவியேற்ற தம்மிக்க பெரேரா தெரிவித்திருந்தார்.
அத்துடன், இரு மாத காலத்திற்குள் கடவுச் சீட்டுக்கான வரிசையை இல்லாது செய்வதாக அவர் கூறியுள்ளார் என்பதும் நினைவூட்டத்தக்கது.










