இலங்கை தொடர்பில் கனடா பிரதமர் கூறிய கருத்தை வெகு விரைவில் முழு உலகமும் கூறும் எனத் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், தமிழர்களுக்கு சொந்தமான காணிகள் மகாவலி அதிகார சபையின் ஊடாக சிங்கள குடியேற்றத்துக்காக பயன்படுத்தப்படுகிறது. இதுவும் ஒருவகையான இன அழிப்பே எனவும் குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ர த்நாயக்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
” முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ரூடோ கூறிய கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம்.கனடா பிரதமரின் கருத்தை கனடாவின் எதிர்க்கட்சி தலைவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இலங்கை தொடர்பில் கனடா பிரதமர் கூறிய கருத்தை எதிர்காலத்தில் அமெரிக்கா ,பிரித்தானியா உட்பட முழு உலகமும் கூறும். ஆகவே முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச பொறிமுறையிலான விசாரணையை நடத்த அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஆனால் இலங்கை தொடர்பில் கனடாவின் நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் புறக்கணித்துள்ளது.
இலங்கை தொடர்பில் சர்வதேச நாடுகள் அதிருப்தியை வெளிப்படுத்தும் போது கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து அவர்களிடம் கண்டனம் தெரிவிப்பதால் நாடு என்ற ரீதியில் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். அனைத்து நாடுகளையும் பகைத்துக் கொண்டால் தனித்தே செயற்பட வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் உரிமைகள் மற்றும் காணிகள் திட்டமிட்ட வகையில் இராணுவத்தின் ஆதரவுடன் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இதுவும் ஒரு வகையான இன அழிப்பே
தமிழர்களுக்கு சொந்தமான மகாவலி எல் வலயம் தற்போது ஜே வலயமாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.மகாவலி அதிகார சபை ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிங்கள குடியேற்றம் தீவிரப்படுத்தப்பட்டு தமிழின அழைப்பு இடம்பெறுகின்றது.” எனவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. குறிப்பிட்டார்.
