எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் முதற்கட்டமாக கப்பல் நிறுவனத்திடம் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாகக் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது – என்று துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்தார்.
” இழப்பீடு கோரும்போது கப்பல் விபத்தால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட இழப்பு, சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்பு, மீனவ சமூதாயத்துக்கு ஏற்பட்டுள்ள தாக்கம், கப்பலில் தீயை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக ஏற்பட்ட செலவீனம் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் கவனத்தில் கொள்ளப்படும். இவற்றுக்கான செலவுகளை ஈடுசெய்யும் வகையிலேயே நடவடிக்கை இடம்பெறும். இதற்காக குழுக்கள் செயற்பட்டுவருகின்றன.” – என்றும் அமைச்சர் கூறினார்.
அதேவேளை, இலங்கை கடற்பரப்புக்குள் கப்பல் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்கள் உட்பட மீனவ சமூதாயத்துக்கு உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஏற்கனவே உறுதிமொழி வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.










