“ பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு சம்பந்தமாக சம்பள நிர்ணய சபை இன்றைய தினம் கூடியது. இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினுடைய அங்கத்தவர்களும் அதில் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் இன்றைய தினமும் பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்பள நிர்ணய சபையின் கூட்டத்தை புறக்கணித்துள்ளன. மீண்டும் ஒருமுறை தோட்டத் தொழிலாளர்களையும் சம்பள நிர்ணய சபையையும் தோட்ட நிறுவனங்கள் புறக்கணித்துள்ளன.”
இவ்வாறு எபாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து தோட்ட நிர்வாகத்தினை புறக்கணிக்க வேண்டும். ஏற்கனவே இரண்டு தடவைகள் கூடிய சம்பள நிர்ணய சபைக்கு முதலாளிமார் சம்மேளனம் வருகை தரவில்லை. மூன்றாம் முறையும் வருகை தராவிடின் நாட்டினுடைய தொழில் சட்டத்திற்கு அமைய சம்பள நிர்ணய சபையில் ஆக கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் எந்தத் தொகை நிர்ணயிக்கப்படுகின்றதோ அதனை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனமாக உறுதி செய்து வர்த்தமானியில் வெளியிட தொழில் அமைச்சருக்கும் தொழில் ஆணையாளருக்கும் அதிகாரம் உள்ளது .
பெருந்தோட்ட நிர்வாகங்களிடம் நாம் கையேந்தவில்லை. உழைப்புக்கேற்ற ஊதியமே கேட்கின்றோம்.
எங்களுடைய பொறுமையை சோதிப்பதினால் பெருந்தொட்ட நிறுவனங்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். வாழ்க்கை செலவுக்கு ஏற்ற ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இனங்காவிட்டால் பெருந்தோட்ட நிறுவனங்கள் தோட்ட தொழிலாளர்களை புறக்கணித்ததைப் போன்று தோட்டத் தொழிலாளர்கள் நடந்து கொண்டால் தோட்ட நிர்வாகங்களில் நிலமை என்னவாகும்?
இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தினுடைய அடுத்த கட்ட நடவடிக்கை கலந்துரையாடலின் பின்னர் அறிவிக்கப்படும்” – என்றார் வடிவேல் சுரேஷ் எம்.பி.
ராமு தனராஜ்










