கம்பளையில் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள பாடசாலை! பேரவலம் ஏற்பட முன் தீர்வு கிட்டுமா?

கடும் மழை காரணமாக கம்பளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆண்டியாகடவத்தை அல் ஹிக்மா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது என பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

மண்சரிய ஆரம்பித்துள்ளதால் உயர்தர வகுப்பு அமைந்துள்ள கட்டிடத்தொகுதியில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன் விஞ்ஞான கூடம் அமைந்துள்ள பகுதி மண்ணுக்குள் புதைந்து போகும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளது.

பாடசாலையில் அதிபர் ஏ.எச்.எம் நூமான் குறிப்பிடுகையில் , பாடசாலையில் கூடுதலான வகுப்புகளின் அருகில் மண்சரிவு அபாயம் காணப்படுவதோடு அங்கு அமைந்துள்ள வகுப்புகளில் பயிலும் மாணவர்களை வேறு இடத்திற்கு மாற்றி வகுப்புகளை நடாத்த உகந்த கட்டிடம் ஒன்று இல்லாமையால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றார்.

மேற்படி மண்சரிவு அபாயம் குறித்து உரிய தரப்பினருக்கு பல முறை அறிவித்த போதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையென குறிப்பிடும் மாணவார்களின் பெற்றோர், உரிய தரப்பினர் இனியும் தாமதிக்காமல் விரைந்து செயற்பட்டு தங்கள் பிள்ளைகளை மண்சரிவு அபாயத்திலிருந்து பாதுகாக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

கம்பளை நிருபர்

Related Articles

Latest Articles