கருவில் உள்ள குழந்தைக்கு நடந்த இதய அறுவை சிகிச்சை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 28 வயதான கர்ப்பிணிப் பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இப்பெண்ணுக்கு ஏற்கனவே மூன்று முறை கரு கலைந்துள்ளது. 4-வது முறையாக அவர் கர்ப்பம் அடைந்திருந்த நிலையில், பரிசோதனையில் கருவில் உள்ள குழந்தைக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அவர்கள் இந்த குழந்தையை பெற்றெடுக்க விரும்பியதையடுத்து கருவிலேயே குழந்தைக்கு இதய சிகிச்சை அளிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். மகப்பேறு மருத்துவத் துறையுடன் இணைந்து இதயவியல் மற்றும் இதய மயக்க மருந்துத் துறை மருத்துவர்கள் குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை செய்தனர்.

அல்ட்ராசவுண்ட் வழிகாட்டுதலின்கீழ் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தாயின் அடி வயிற்றில் துளையிட்டு மெல்லிய குழாய் செலுத்தப்பட்டு, அது கருவில் உள்ள குழந்தையின் இதயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதிலிருந்து சிறிய பலூன் வடிவ குழாயைப் பயன்படுத்தி, குழந்தையின் திராட்சை அளவு கொண்ட இதயத்தில் இருந்து அடைப்பு நீக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை 90 வினாடிகளில் செய்து முடித்தனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, அறுவை சிகிச்சை செய்த மூத்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், தாயின் அடி வயிற்றின் வழியாக கருவில் உள்ள குழந்தையின் இதயத்தில் ஒரு ஊசியை செலுத்தி அடைப்பை சரி செய்தோம். குழந்தையின் இதயம் நன்றாக வளரும் என்று எதிர்பார்க்கிறோம். குழந்தை பிறக்கும்போது இதய நோயின் தீவிரம் குறைவாக இருக்கும். இதுபோன்ற ஒரு சிகிச்சை மிகவும் சவாலானது. ஏனென்றால் அது கருவின் உயிருக்கு கூட ஆபத்தாகலாம். இந்த சிகிச்சையை நாங்கள் விரைவாக செய்து முடித்தோம் என்றார்.

Related Articles

Latest Articles