” வடக்கு இளைஞர்களும், தெற்கு இளைஞர்களும் மண் உரிமைக்காக போரிட்டனர், இன்று போர் முடிந்துவிட்டது, ஆனால் நாம் அனைவரும் தோல்வி அடைந்தவர்களாக நிற்கின்றோம். ஏனெனில் எமது நாட்டு இங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுவருகின்றது. அந்நாடுதான் உரிமையாளராக மாறியுள்ளது.”
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மாவட்ட அதிகார சபைக்கான தேர்தலின்போது, யாழ்ப்பாணத்தில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக யாழ். நூலகத்தை எரித்து வாக்குபெட்டிகளை ஜே.ஆர். ஜயவர்தன நிரப்பிக்கொண்டார். காமினி ஜயவிக்கிரம பெரேரா என்ற பொலிஸ் அதிகாரியே இந்த செயலை வழிநடத்தியுள்ளார். அந்த இதயத்தைதான் ஆட்சியாளர்கள் வாக்குபெட்டி நிரப்புவதற்காக எரித்தனர்.
அதன்பின்னர் கறுப்பு ஜுலை அரங்கேற்றப்பட்டது. இலங்கை வரலாற்றில் இதுதான் கறுப்பு பக்கம். என்றுமே நியாயப்படுத்த முடியாத கொடூரம். இவ்வாறான அவலங்களால்தான் ஆயுத போராட்டம் உருவாகி, தற்கொலை போராளிகள்கூட உருவாகினர்.
30 வருட போரில் வடக்கிலும் உயிரிழப்புகள் இடம்பெற்றன, தெற்கிலும் உயிரிழப்பு இடம்பெற்றன. தெற்கிலும் போர் வீரர்கள் உள்ளனர், வடக்கில் உள்ள மக்கள் நினைப்பதுபோல் அவர்களுக்கும் போர் வீரர்கள் உள்ளனர்.
வடக்கில் உள்ள தாய் தமது பிள்ளையின் படத்தை வைத்துக்கொண்டு வீதியில் போராடுகின்றார், தெற்கில் உள்ள தாய், இராணுவ நினைவு தூபிக்கு முன்னால் நின்றுகொண்டு தனது மகனின் பெயரை தேடுகின்றார்.
போரால் வடக்குக்கும், தெற்குக்கும் எஞ்சியது என்ன? போர் முடிந்துவிட்டது, நாம் அனைவரும் தோல்வி அடைந்துவிட்டோம்.
மன்னாரை மீட்பதற்கு கடும் சமர் இடம்பெற்றது. அது தமது மண்ணென வடக்கு இளைஞர்கள் போரிட்டனர், அந்த பகுதியை தம்முடன் இணைத்துக்கொள்ள தெற்கு இளைஞர்கள் போரிட்டனர். ஆனால் இன்று மன்னாரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் அதானிக்கு வழங்கப்பட்டுள்ளது. 4 ஆயிரம் மெகா ஹோல்ட் காற்றாலை மின் உற்பத்தி இடம்பெறவுள்ளது.
பூநகரிக்காகவும் சண்டை இடம்பெற்றது. அந்த இடமும் காற்றாலை மின் உற்பத்திக்கு அதானிக்கு வழங்கப்படவுள்ளது.
திருகோணமலையில் பொருளாதார நிலையம் அமைப்பதற்காகவும் இந்தியாவுக்கு இடங்கள் வழங்கப்படவுள்ளன. இந்தியாதான் இன்று உரிமையாளராகிவிட்டது.
துன்பம், வேதனை, கசப்பான வரலாறு என்பனவே எமக்கு எஞ்சியுள்ளன.
வடக்கிலும் இனவாதம் உள்ளது, தெற்கிலும் உள்ளது, அவற்றுக்கு அப்பால் நாம் அனைவரும் இலங்கையர்களாக இணைந்து, இன ஐக்கியத்தை ஏற்படுத்திக்கொண்டு புதிய சுதந்திர போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். ” – என்றார்.