கலைகள் வாழவேண்டும், கலைஞர்கள் வளரவேண்டும் ஒரு இளைஞராக கலைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஜீவன்

” பிரச்சினைகளை செவிமடுத்தல், அவற்றுக்கான தீர்வு முன்மொழிவு உள்ளிட்ட ஜீவன் தொண்டமானின் கலந்துரையாடல் அணுகுமுறையானது அரசியலில் வேறு ‘லெவல்’ என்று மலையக கலைஞர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கலைஞர்களுக்கான அதிஉயர் கௌரவமென்பது அவர்களின் திறமைக்கு மதிப்பளித்தல், உற்சாகப்படுத்தல் என்பதாகும். இவற்றை அறிந்துவைத்துள்ள ஜீவன் தொண்டமான், கலைஞர்களுக்கு நேசக்கரம் நீட்டுவதற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறார் என்பதும் உறுதியாகியுள்ளது எனவும் சுட்டிக்காட்டினர்.

மலையக கலைஞர்களுக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருக்குமிடையிலான நேரடி கலந்துரையாடலொன்று கொட்டகலை சிஎல்எவ் வளாகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

அரசியலுக்கு அப்பால் ஒரு இளைஞனாக கலைஞர்களை சந்தித்து, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து, யோசனைகளையும் உள்வாங்கி, தீர்வு பொறிமுறையை தயாரிப்பதற்காகவே இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பங்கேற்றிருந்த கலைஞர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானிடம் சுட்டிக்காட்டி, யோசனைகளையும் முன்வைத்தனர். கலைஞர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை செவிமடுத்த ஜீவன் தொண்டமான், தன்னால் எவ்வாறான திட்டங்களை முன்வைக்கமுடியும் எனவும் விபரித்துள்ளார்.

இந்நிலையில் இந்த சந்திப்பு தொடர்பில் மலையகத்திலுள்ள மூத்த கலைஞர்கள் சிலர் வெளியிட்ட கருத்து வருமாறு,

” பொதுச்செயலாளர் என்ற உயர் பதவி கிடைத்ததும்  ஜீவனின் மனநிலை மாறியிருக்கும் என்ற எண்ணம் எம்முள் இருந்தது. ஆனால், அவரை நேரில் சந்தித்த பின்பு அவர் அப்படி பட்டவர் அல்லர் என்றும், இளைஞர் அணி பொதுச்செயலாளராக இருந்தபோது கலைஞர்களுடன் எவ்வாறு பழகினாரோ அதே மதிப்பையும், மரியாதையையும் இன்றும் வைத்துள்ளார் என்பதையும் அறிந்துகொண்டோம்.

கலைஞர் ஒருவரை பணத்தால் திருப்திபடுத்தமுடியாது. அவருக்கான களத்தை அமைத்துக்கொடுத்து – திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கினால் மட்டுமே கலையும் வாழும் கலைஞனும் வளர்வான். அதற்கான களத்தை – தளத்தை அமைத்துக்கொடுக்கும் திட்டம் ஜீவனிடம் இருக்கின்றது.

அதுவும் குறிப்பாக எமது பாரம்பரிய கலைகளை பாதுகாத்து, புதுமைகளுக்கும் வழிவிட்டு கலைத்துறையிலும் மலையக இளைஞர்கள் புரட்சி செய்யவேண்டும் எனவும், அதற்காக தன்னால் முடிந்த உதவிகள் செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளது எமக்கு புது தெம்பை வழங்கியுள்ளது. இதற்கு முன்னரும் அரசியல் பிரமுகர்களை சந்தித்து குறைகளை கொட்டியுள்ளோம். ஆனால், ஜீவனுடன் நடைபெற்ற சந்திப்பு ஆக்கபூர்வமானதாகவும், ஆத்ம திருப்தியுடையதாகவும் அமைந்தது. எனவே, ஜீவன் போன்ற அரசியல் தலைமைகளே எமக்கு தேவை” – என்றனர்.

Paid Ad