இலவசக்கல்வியை தனியார் மற்றும் இராணுவ மயப்படுத்துவதற்கு அரசு முயற்சிப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஆளுங்கூட்டணியின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முற்றாக நிராகரித்துள்ளது.
அத்துடன், நாட்டிலுள்ள பல்கலைக்கழக கட்டமைப்பு விரிவுபடுத்தப்படும் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடு அக்கட்சியிலுள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அக்கட்சியின் உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாட்டில் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றுகின்றனர். அவர்களில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு மாத்திரமே பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பு கிட்டும். வசதி படைத்தவர்கள் தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி பட்டம்பெற வைப்பார்கள்.
ஆனால் நடுத்தர வகுப்பில் உள்ளவர்களுக்குதான் நெருக்கடி. 3 பாடங்களில ஏ சித்திகளை பெற்றவர்கள்கூட பல்கலைக்கழகம் செல்லமுடியாத நிலை காணப்படுகின்றது. அவர்களுக்கு வெளிநாடு செல்லவும் நிதிவசதி இல்லை.
எனவே, உள்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் விரிவுபடுத்தப்படவேண்டும். இதன் அர்த்தம் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்குவது அல்ல. அரச பல்கலைக்கழகங்களை விருத்தி செய்யவேண்டும் என்பதாகும். சேர் ஜோன் கொத்தலாவ பல்கலைக்கழகம், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்கீழ்தான் செயற்படுகின்றது.
பாடத்திட்டங்களை இராணுவம் உருவாக்குவதில்லை. முறையாகவே நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.நிர்வாகத்தில் ஒரு சிலர் மட்டுமே இராணுவத்தினர் உள்ளனர். ஏனையோர் பல்கலைக்கழகங்களுடன் தொடர்புபட்டவர்கள். எனவே, கல்வி இராணுவ மயப்படுத்தப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு ஏற்புடையது அல்ல.
ஜே.வி.பி. தலைவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் படித்துபட்டம் பெறுகின்றனர். அவர்கள் இங்கு போராடுகின்றனர்.” – என்றார்.










