காசாவில் இனப்படுகொலையில் ஈடுபடும் தரப்புடன் நட்புறவு கிடையாது: சஜித்

“காசாவில் அரங்கேறும் இனப்படுகொலையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். வைத்தியசாலைகள், பாடசாலைகள்மீது குண்டுகளைபோட்டு, படுகொலையில் ஈடுபடும் அரச பயங்கரவாத கலாசாரம் முடிவுக்கு வரும்வரை, அந்த தரப்புடன் எமக்கு நட்புறவு கிடையாது. சங்கமும் கிடையாது. சங்கமும் அமையாது.”

என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இஸ்ரேல், இலங்கை நட்புறவு சங்கத்தை கட்டியெழுப்புவதற்குரிய அழைப்பை ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்ஹ விடுத்திருந்தார். இது பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியது. பின்னர் அவர் மன்னிப்புகோரி, அதற்குரிய முயற்சியை கைவிட்டார்.

இந்நிலையிலேயே சஜித் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

” பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக நாம் முன்னிற்கின்றோம். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் என்பன சமரசத்துடன் செயற்பட வேண்டும் என்பது எமது கொள்கை.
பாலஸ்தீனமானது இன்று இஸ்ரேல் அரச பயங்கரவாதத்தை எதிர்கொண்டுவருகின்றது.
காசாவில் இன்று இனப்படுகொலை நடக்கின்றது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

வைத்தியசாலைகளுக்கு குண்டுகளைபோட்டு, படுகொலையில் ஈடுபடும் அரச பயங்கரவாத கலாசாரம் முடிவுக்கு வரும்வரை, அந்த தரப்புடன் எமக்கு நட்புறவு கிடையாது.

சங்கமும் கிடையாது. இது விடயத்தில் நாம் தெளிவாக இருக்கின்றோம். இதுதான் எமது கொள்கை: நிலைப்பாடு. எந்த அழுத்தங்களுக்கும் அடிபணியமாட்டோம். அழுத்தங்களால் எமது நிலைப்பாடு மாறப்போவதும் இல்லை.” – என சஜித் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles