முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் காணாமல்போன சிறுமி, மூன்று நாட்களின் பின்னர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூங்கிலாறு வடக்கு, உடையார்கட்டைச் சேர்ந்த யோகராசா நிதர்சனா என்ற 13 வயது சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி தனது கல்வி நடவடிக்கைக்காக திருகோணமலையில் விடுதியொன்றில் தங்கி கற்று வருகின்றார்.
இந்நிலையில் கடந்த 13 ஆம் திகதி தனது வீட்டுக்கு வந்துள்ளார். 15 ஆம் திகதி திடீரெனக் காணாமல்போயுள்ளார்.
சிறுமி காணாமல்போனமை தொடர்பில் குடும்பத்தினர் அன்றைய தினமே புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சிறுமியின் வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் உள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியில் குறித்த சிறுமி ஆடைகளையப்பட்ட நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.










