காது குத்த மயக்க ஊசி செலுத்தியதால் 6 மாத குழந்தை உயிரிழப்பு: கர்நாடகாவில் சோகம்

கர்நாடகாவில் 6 மாத குழந்தைக்கு காது குத்துவதற்காக மயக்க ஊசி செலுத்தியதால், உடல் நிலை பாதிக்கப்பட்டு குழந்தை உயிரிழந்தது.

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் குண்டுலுபேட்டையை அடுத்துள்ள ஷெட்டிஹள்ளியை சேர்ந்தவர் ஆனந்த் (32). தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நேற்று முன் தினம் காது குத்தும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

காது குத்தும் போது வலி தெரியாமல் இருப்பதற்காக ஊசி செலுத்த‌ பொம்மல்லாப்புரா அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றார். அங்கிருந்த மருத்துவர் நாகராஜூ இரு காதுகளின் மடல்களிலும் மயக்க மருந்து ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு கட்டணமாக அவர், ரூ.200 பெற்றுள்ளார்.

6 மாத குழந்தைக்கு அதிக வீரியம் நிறைந்த மயக்க ஊசி செலுத்தியதால் குழந்தை உடனடியாக மயங்கியது. மேலும் அதன் வாயில் நுரை தள்ளியது. இதையடுத்து மருத்துவர் நாகராஜூ குண்டுலுபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதனர். மேலும் ஷெட்டிஹள்ளி மருத்துவமனையை முற்றுகையிட்டு, மருத்துவர் நாகராஜூ மீது நடவடிக்கை எடுக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த குண்டுலுபேட்டை போலீஸார், மருத்துவர் நாகராஜூ மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன‌ர்.

மருத்துவர் விளக்கம்: மயக்கவியல் மருத்துவர் தனசேகரன் கூறுகையில், ‘‘குழந்தைகளுக்கு காது குத்தும் போது தூங்குவதற்கு மருந்து அல்லது மயக்க மருந்து கொடுப்பது இயல்பான ஒன்று தான். பல இடங்களில் அப்படி தான் குழந்தைகளுக்கு காது குத்தப்படுகிறது. மருந்து கொடுப்பதில் அளவு உள்ளது. அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுத்தால் பிரச்சினை ஏற்படும்’’ என்றார்.

நன்றி – தி ஹிந்து

Related Articles

Latest Articles