கிணற்றில் வீழ்ந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு: மட்டக்களப்பில் சோகம்!

மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் நேற்றுக் குளிக்கும்போது தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தும்பங்கேணி கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான தங்கராசா பரமானந்தம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி குடும்பஸ்தர், நீர்நிலையில் வீழ்ந்து உயிரிழந்த குழந்தையின் மரண வீட்டுக்குச் சென்றுவிட்டு வந்து கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தபோதே கிணற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளார் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

உடனடியாக பிரதேசவாசிகளின் உதவியுடன் அவர் பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.

Related Articles

Latest Articles