இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
அவர் 452 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை வசப்படுத்தினார்.
இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தல், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி முதல் வாக்கை பதிவு செய்தார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் வாக்களித்தார்.
வாக்குகள் முழுவதுமாக எண்ணி முடிக்கப்பட்டதை அடுத்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்றுள்ளார். சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றுள்ளார்.
இதன் மூலம், சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட இவர் அனைவரிடமும் சுமுகமாக பழகக்கூடியவர். சர்ச்சைகளில் சிக்காதவர். கடந்த 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்று மக்களவைக்கு தேர்வானவர். மகாராஷ்டிர ஆளுநராக 2024 ஜூலை 31 முதல் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.