குட்டி சபைகளின் கஜானாவிலும் கையடிக்க பஸில் முயற்சி

பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை தொடர்பில் பெருமெடுப்பில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் ‘விசில் மட்டும்தான் பல்டி இல்லை’ என்பதுபோல எதுவும் நடக்கவில்லை. மாறாக உள்ளாட்சிமன்றங்களின் கஜானாவிலும் கையடிப்பதற்கு முயற்சிக்கின்றார் – என்று ராஜபக்ச ஆட்சியில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவியை வகித்தவரும், தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராக பதவி வகிக்கும் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இன்று முக்கிய அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்கள் ராஜபக்ச குடும்ப வசம்தான் உள்ளன. பட்ஜட்டில் ஒதுக்கப்படும் நிதியில் 80 வீதம் இவர்களுக்கே ஒதுக்கப்படக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறானதொரு நிலையால்தான் அன்று நாம் வெளியேறினோம். இன்று சுதந்திரமாக அரசியல் செய்கின்றோம். ஆனால் எமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தவர்கள் இன்று ஓப்பாரி வைத்து அரசியல் நடத்துகின்றனர்.

ஜனாதிபதிக்கும், சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு வெற்றி என சுதந்திரக்கட்சி கூறும் நிலையில், ஆளுங்கட்சியின் பிரதான பங்காளி சுதந்திரக்கட்சி அல்ல என்று மொட்டு கட்சி செயலாளர் குறிப்பிடுகின்றார். ஆக ஜனாதிபதி ஒரு வழியிலும், பஸில் இன்னுமொரு வழியிலுமே பயணிக்கின்றனர். சுதந்திரக்கட்சி விவகாரம் இதற்கு சான்றாகும்.

மஹிந்த ஆட்சிகாலத்தில் பஸிலே பொருளாதாரத்தை நிர்வகித்தார். எல்லா அமைச்சுகளிலும் கையடித்தார். ஆனால் மஹிந்த தோல்வியடைந்த பின்னர் வெளிநாடு ஓடினார். தற்போது மீண்டும் வீரனாக வந்துள்ளார். அவரின் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சமைத்து இதனை கொண்டாடுகின்றனர். ஆனால் அவரின் வருகையால் எதுவும் நடக்கவில்லை. மாறாக உள்ளாட்சி மன்றங்களின் நிதியையும் பெறுவதற்கு முயற்சிக்கின்றனர்.

தண்டப்பணம் மற்றும் முத்திரை உள்ளிட்ட கட்டணங்கள் ஊடாகவே மாகாண நிதியத்துக்கு பணம் கிடைக்கும். அதனை முதல்வர் உள்ளாட்சிமன்றங்களுக்கு பிரித்துகொடுப்பார். அதன்மூலமே பாலம் அமைப்பு உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இன்று மாகாணசபைகள் இயங்கவில்லை. அரச விசுவாசிகளான ஆளுநர்கள்தான் உள்ளனர். எனவே, மத்தியில் திறைசேரியை வெற்றி பாத்திரமாக்கியவர்கள், குட்டி திறைசேரிகளிலும் கையடிக்க பார்க்கின்றனர். இந்த அரசு எல்லா வழிகளிலும் பெயில்.” – என்றார்.

 

Related Articles

Latest Articles