எதிரணிகள் பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ள உள்ளுராட்சிசபைகளில் இணைந்து ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன தீர்மானித்துள்ளன.
இது தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் பேச்சு நடத்தி, இவ்வாரத்துக்குள் இறுதி நிலைப்பாட்டை எட்டுவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்திக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, சிரேஷ்ட உப தலைவர் லக்ஷ்மன் கிரியல்ல, பிரதி பொதுச்செயலாளர் முஜிபூர் ரஹ்மான் ஆகியோர் பங்கேற்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள, பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, தவிசாளர் வஜிர அபேவர்தன மற்றும் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோர் மேற்படி சந்திப்பில் கலந்துகொண்டனர்.
சந்திப்பு முடிவடைந்த பின்னர் இரு கட்சிகளின் செயலாளர்களும் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அவ்வறிக்கையிலேயே எதிரணிகள் பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ள சபைகளில் இணைந்து ஆட்சியமைக்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பொதுஜன ஐக்கிய முன்னணி உள்ளிட்ட தரப்புகளும் இணைந்து ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் சாதகமான நிலைப்பாட்டிலேயே உள்ளது.
சுமார் 132 உள்ளுராட்சி சபைகளில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் ஆட்சி மலரும் எனக் கூறப்படுகின்றது.
அதேவேளை, கொழும்பு மாநகரசபை உட்பட முக்கிய சபைகளில் சுயாதீன உறுப்பினர்கள் மற்றும் தனிப்பட்ட உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியமைப்பதற்குரிய முயற்சியில் அரசாங்கமும் ஈடுபட்டுவருகின்றது.