எம்மிடம் இரட்டை வேடம் கிடையாது: 13 அமுல்படுத்தப்படும்!

ஐக்கிய மக்கள் சக்தி இரட்டை வேட பேச்சுக்களைப் பேசாமல், 13 ஆவது திருத்தத்தை அதில் உள்ளவாறே நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றுகையிலேயே சஜித் இவ்வாறு கூறினார்.

“ நாட்டின் இறையாண்மை, ஆள்புல ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாத்து, நாட்டில் வாழும் பல்வேறு சமூகங்களுக்கும் உன்னத ஜனநாயக உரிமைகளை வலுப்படுத்தும் அதிகார பகிர்வுக்கு இந்த மாகாண சபைகள் ஊடாக வழி கிட்டின.

இது நாட்டின் உச்ச சட்டமாதலால் ’13 பிளஸ்’ அல்லது ’13 மைனஸ்’ என நாம் கூற மாட்டோம். இந்நாட்டில் அரசியலை முன்னெடுத்து வரும் பல தரப்பினர் சர்வதேசத்தை சந்தித்த சமயங்களில் ’13 பிளஸ்’ என்று கூறிவிட்டு, நமது நாட்டிற்கு வந்து சில பிரதேசங்களில் கூட்டங்களை நடத்தி, ’13 மைனஸ்’ என்று இரட்டை வேட பேச்சுக்களைப் பேசினர்.

ஐக்கிய மக்கள் சக்தி இத்தகைய இரட்டை வேட பேச்சுக்களைப் பேசாமல், 13 ஆவது திருத்தத்தை அதில் உள்ளவாறே நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு கட்சியாகவும், அரசியல் சக்தியாகவும் நாம் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, மக்கள் மத்தியில் செல்லவதற்கு அச்சப்படும் ஜனாதிபதியும், கோழைத்தனமான, வினைத்திறனற்ற அரசாங்கமுமே ஆட்சியில் உள்ளது.

இந்த கோழைத்தனம் மாகாண சபை தேர்தலை நடத்த தயக்கம் காட்டுவதில் அப்பட்டமாக வெளிப்படுகின்றது.
மக்கள் மாகாண சபை தேர்தல் நடத்துமாறு கேட்டாலும், பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஆட்சிக்கு வந்து மிகக் குறுகிய காலத்தில் தற்போதைய அரசாங்கம் சுமார் 23 இலட்சம் வாக்குகளை இழந்தது.

மாகாண சபை தேர்தலை நடத்தினால் மேலும் பல இலட்சம் வாக்குகள் இழக்கப்படும் என்ற அச்சத்திலயே அரசாங்கம் தற்போது நடவடிக்கைகளைச் செய்து வருகின்றது.

அச்சப்படும், கோழைத்தனமான, வினைத்திறனற்ற, மக்களை ஏமாற்றிய இந்த அரசாங்கத்தால் தற்சமயம் மக்கள் மத்தியில் சென்று மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ள முடியாமல் போயுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Related Articles

Latest Articles