அரசாங்க பாடசாலைகளுக்குரிய சுமார் 8 லட்சம் பெறுமதியான 19,892 பாடநூல்களை, விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (15) உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், இன்று (15) கடுவலை நீதவான் அருண புத்ததாச முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் ஆண்டிற்கான தமிழ் செயல்பாடு மற்றும் பாடநூல்கள் 19,892 காணாமல் போன சம்பவம் தொடர்பில் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் உயர் பெண் அதிகாரி ஒருவர் அண்மையில் தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த புத்தகத் தொகுதியை கொண்டு சென்ற லொறி சாரதி, அந்தப் புத்தகங்களை பழைய காகிதம் மற்றும் போத்தல் வியாபாரி ஒருவருக்கு விற்று 47,000 ரூபாவை பெற்றுக்கொண்டமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த சாரதி, நூல்களை வாங்கியவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
