உள்ளாட்சிசபைத் தேர்தலுக்குகூட அஞ்சம் எதிர்க்கட்சிதான், ஆட்சியை கைப்பற்றுவதைப்பற்றி கதைத்துவருகின்றது. இது வெறும் கனவு மாத்திரமே என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
உள்ளாட்சிசபைத் தேர்தலை ஏப்ரல் மாதத்துக்குள் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், அதனை ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ள சூழ்நிலையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“எம்முடன் எதிரணிக்கு கொள்கை ரீதியாக மோதமுடியவில்லை. எமது கொள்கைகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்க முடியவில்லை. எமது அரசியல் கலாசாரத்துடன் அவர்களால் ஒருபோதும் மோத முடியாது.
அதனால்தான் குப்பைகளைக்கிளறி, எமக்கு எதிராக சேறுபூசும் கீழ்த்தரமான அரசியல் செயல்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
இது மக்கள் அரசாங்கம். மக்களால் உருவாக்கப்பட்ட, மக்களால் பாதுகாக்கப்பட்டுவரும் அரசாங்கம். எனவே, அரசியலில் தோல்வி அடைந்துள்ள தரப்புகளுக்க, இப்படியான மக்கள் சக்தியுடன் மோத முடியாது.
அதிகாரத்தில் இருக்கும் நபர்கள்தான் தேர்தலுக்கு அஞ்ச வேண்டும். ஆனால் தேர்தலை நடத்த அவசரப்பட வேண்டாம் என எதிரணிகள், தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளன.
மக்கள் மத்திக்கு செல்வதற்கு நாம் பயப்படவில்லை. மக்களின் நிலைப்பாட்டை அறியவும் நாம் அஞ்சவில்லை. தேர்தல் திகதியை தேர்தல் ஆணைக்குழுவே நிர்ணயிக் கவேண்டும். நாம் தேர்தலை பிற்போடுமாறு கேட்கப்போவதில்லை.
தேர்தல் ஊடாக மக்கள் மத்திக்கு செல்வதற்கு அஞ்சம், எதிரணியே ஆட்சியை பிடிப்பது பற்றி கதைக்கின்றது. அது முடியுமா? முடியாது. கனவு மாத்திரமே.” – என்றார்.
