“பெருந்தோட்ட நிறுவனங்களுக்குரிய குத்தகை ஒப்பந்தம் நீடிக்கப்படக்கூடாது. இந்தத் தவறை அரசாங்கம் செய்யாது என்றே நம்புகின்றேன். அவ்வாறு செய்ய முற்பட்டால் மக்கள் நிச்சயமாக வீதிக்கு இறங்குவார்கள்.
இன்று நீங்கள் அந்தப் பக்கம் (ஆளுங்கட்சி) இருக்கலாம். நாளை நான் அந்தப் பக்கம் இருக்கலாம். அந்தக் காலம் வரும்போது மேற்படி குத்தகை ஒப்பந்தம் கிழித்தெறியப்படும்” என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும்போது, அதனை வர்த்தமானியில் வெளியிடுமாறு நாம் வலியுறுத்தினோம். எனினும், அவ்வாறு செய்யப்படவில்லை. இதனால் தனியார் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வு கிடைக்கவில்லை.
தொழில் அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தின்போது, இதற்குரிய கணக்கு விபரங்கள் நிச்சயமாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இம்முறையும் 200 ரூபா வழங்கப்படுகின்றது. ஆனால், சிறுதோட்ட உரிமையாளர்களுக்கு மானியம் வழங்கப்படுகின்றது. மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பில் ஜனாதிபதி எதுவும் பேசவில்லை. இது வருத்தமளிக்கின்றது.
பெருந்தோட்ட நிறுவனங்களுடனான குத்தகை ஒப்பந்தம் 2045ஆம் ஆண்டில்தான் முடிவடைகின்றது. அவ்வாறிருக்கும்போது, தற்போது ஏன் அது தொடர்பில் பேசப்பட வேண்டும்?
2045ஆம் ஆண்டிலும் எமது தொழிலாளர்கள் தோட்டங்களிலேயே வேலை செய்வார்கள் என நினைப்பது தவறு. எமது மக்கள் முன்னேறிச் செல்ல முடியாதா?” என்றார் ஜீவன் தொண்டமான்.










