” தங்களுக்கு அதிகாரத்தை தாருங்கள், ஆட்சிக்கு வந்தால் யானையைத் தருவோம், பூனையைத் தருவோம் என சூளுரைத்தவர்கள் இன்று ஒளிந்துவிட்டனர்.20 பேர்ச்சஸ் காணியில் வீடு கட்டப்படும் என கூறியவர்கள் இன்று 7 பேரச்சஸ் காணியில்கூட வீடு கட்டவில்லை. நான் 100 நாட்கள் ஆட்சியின்போது 300 வீடுகளைக் கட்டினேன்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” என்னையும் இந்த அரசாங்கம் அழைத்தது, நான் செல்லவில்லை. 2024 இல் எமது ஆட்சி உருவாகும். சஜித் ஜனாதிபதியாவார். அவர் தலைமையிலான ஆட்சியின்கீழ் நாம் அமைச்சர்களாக இருப்போம். உரியவகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
எனவே, துரோகிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, நல்லவர்களை பாராளுமன்றம் அனுப்புங்கள். இதனைவிடுத்து ஏமாற்றுபவர்களின் வார்த்தைகளை நம்ப வேண்டாம். ஓல்டன் தோட்டத்தில் காட்டிக்கொடுப்பு நடந்துள்ளது. தொழிலாளர்களை தூண்டிவிட்டு தற்போது மௌனம் காக்கின்றனர்.
துரைமாரை அடிக்குமாறு நான் தொழிலாளர்களை தூண்ட மாட்டேன். அடிப்பதாக இருந்தால் நான் சென்று அடிப்பேன், சிறைக்கும் செல்வேன். நான் எதற்கும் அஞ்சமாட்டேன். எனக்கு குறுக்கு பாதையிலும் ஓட தெரியும். கவ்வாத்து கத்தியையும் கையில் எடுக்க முடியும். எனவே, மக்களை கைவிடமாட்டோம்.” – என்றார்.
