குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசி வழங்க நடவடிக்கை!

“ அஸ்வெசும ஊடாக 24 லட்சம் பேருக்கு நன்மைகள் அளிக்க எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் கீழ் மட்டத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும். நமது நாட்டின் வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகை நிதி மானியம் வழங்கப்படவில்லை. வரும் பண்டிகை காலத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 20 கிலோ வீதம் அரிசி, நிவாரணமாக வழங்கப்படும்.”

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று அரசின் கொள்கை விளக்க உரையை முன்வைத்து உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

“ 2022 ஓகஸ்ட் மாதமளவில், ஜனாதிபதி நிதியம் முற்றிலும் செயலிழந்தது. 9,000 இற்கும் மேற்பட்ட மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள், பணம் இல்லாமல் குவிந்திருந்தன. ஓகஸ்ட் முதல் டிசம்பர் வரை மேலும் 4,000 விண்ணப்பங்கள் வரை கிடைத்தன. அவை அனைத்திற்கும் பணம் செலுத்தப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் 4,917 நோயாளர்களுக்கு 915 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது.

தற்போது பணம் செலுத்துவதற்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மூன்று அல்லது ஜந்து வேலை நாட்களுக்குள் பணம் செலுத்தும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அனைத்து மருத்துவ உதவிகளையும் 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உதவித் தொகைகளுக்கு மேலதிகமாக ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு நாம் விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்கினோம். ஓய்வூதியம் பெறுவோரின் சம்பளத்தை உயர்த்தினோம். 2016 முதல் 2020 வரை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு சம்பள முரண்பாடு உள்ளது. அந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கும் போது அதற்கு சமாந்தரமாக நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.” – எனவும் ஜனாதிபதி அறிவித்தார்.

 

Related Articles

Latest Articles