உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச நெறிமுறைகளைப் பின்பற்றி, சர்வதேச கண்காணிப்புடன்தான் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது கத்தோலிக்க திருச்சபை. அத்துடன், ஜனாதிபதியால் முன்மொழியப்பட்டுள்ள விசாரணைக்குழு யோசனையையும் அடியோடு நிராகரித்துள்ளது.
சர்வதேசத்தின் கண்காணிப்புடன் சுயாதீன விசாரணை முடிவடையும்வரை அரச புலனாய்வு பிரிவின் பிரதானி உட்பட குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் பேராயர் குழுவின் உறுப்பினரும், கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளருமான அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ கூறியவை வருமாறு,
” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் – 4 அலைவரிசை வெளியிட்ட காணொளி தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் தலைமையில் குழுவொன்றை அமைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார் என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அத்துடன், நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று அமைப்பதற்கான உத்தேசமும் உள்ளது எனவும் கூறப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இதற்கு முன்னரும் இரு குழுக்கள் அமைக்கப்பட்டன. நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவற்றின்மூலம் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறு கிடைக்கவில்லை என்பதை முழு நாடும் அறியும். மக்கள் பணமும், நேரமும்தான் வீணடிக்கப்பட்டது.
எனவே, ஜனாதிபதியால் ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவர் தலைமையில் நியமிக்கப்படும் குழுவோ அல்லது நாடாளுமன்ற தெரிவுக்குழுவோ பக்கச்சார்பற்ற வகையில் செயற்படும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. இதுவும் மக்கள் பணத்தையும், நேரத்தையும் வீணடிக்கும் செயல். மக்களை ஏமாற்றும் செயல். இந்த யோசனையை நாம் அடியோடு நிராகரிக்கின்றோம்.
உள்ளக விசாரணைக்குழுக்களிடம் சாட்சியம் வழங்கினால் தமக்கு அச்சுறுத்தல் என சாட்சியாளர்கள் அச்சப்படக்கூடும். அரசியல் தலையீடுகள் இடம்பெறும். எனவே, சுதந்திரம் இருக்காது. வெளிப்படை தன்மையுடன் சுயாதீன விசாரணை இடம்பெற வேண்டுமென்றால் சர்வதேச கண்காணிப்பு குழுவின் கண்காணிப்பு நிச்சயம் இருக்க வேண்டும். சர்வதேச நடைமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும்.
விசாரணை முடியும்வரை பாதுகாப்பு தரப்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நபர்களின் பணி இடைநிறுத்தப்பட வேண்டும். ரஞ்சன் ராமநாயக்கவுடன் கதைத்த காணொளியொன்று வெளியானதால் ஷானி அபேசேகர அன்று பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் சனல் – 4 காணொளியில் கூறப்படும் அரச புலனாய்வு பிரிவு பிரதானி இன்னும் பணியில் உள்ளார். இப்படியான பல அதிகாரிகள் உள்ளனர். சிலருக்கு பதவி உயர்வுகூட வழங்கப்பட்டுள்ளது. இவர்களை வைத்துக்கொண்டு சுயாதீன விசாரணை நடத்த முடியாது. ஆகவேதான் பணி நீக்கம் செய்வது அவசியம் எனக் கூறுகின்றோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்து நிறுத்தியவர் எனக் கூறப்படும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலாந்த ஜயவர்தன மற்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் தேசபந்து ஆகியோர் கட்டாயம் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள அதிகாரிகள், உள்ளக விசாரணையில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும்.
வழக்கு தொடுக்கும் அதிகாரம் விசாரணைக்குழுக்கு வழங்கப்பட வேண்டும், அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மட்டும் இருக்ககூடாது. நீதியை நிலைநாட்டும் எதிர்பார்ப்பு ஜனாதிபதிக்கு இருக்குமானால் எமது இந்த கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும். சர்வதேச மட்டத்திலான விசாரணை அவசியம் என ஐநா மனித உரிமைகள் பேரவையும் வலியுறுத்தியுள்ளது. இந்த பரிந்துரையை முன்வைத்த மனித உரிமைகள் பேரவைக்கு நன்றி.
சனல் – 4வில் முன்வைக்கப்பட்டுள்ள தகவல்களை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. விசாரணை இன்றியே நிராகரிக்கப்பட்டுள்ளது .விசாரணை நடத்திய பின்னர் பதில்களை வழங்கி இருந்தால் அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும். நாட்டுக்கு எதிராகவோ அல்லது அரசுக்கு எதிராகவோ சனல் – 4வில் குற்றச்சாட்டு இல்லை. நபர்கள் தொடர்பிலேயே முன்வைக்கப்பட்டுள்ளது. நிலைமை இவ்வாறு இருக்கையில் பாதுகாப்பு அமைச்சு ஏன் இவ்வாறு செயற்பட வேண்டும்? இவ்வாறு நிராகரிப்பு இடம்பெறும் நிலையில்தான் விசாரணைக்குழுக்கள் அமைக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது. இது ஒன்றுடன் ஒன்று முரண்படுகின்றது. இப்படி ஒரு நாட்டை நிர்வகிக்க முடியுமா? – என்றார்.