போர் இல்லாத சூழ்நிலையிலும் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உண்மை முகமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.
” வருடாந்த வரவு- செலவுத் திட்ட சடங்கு நடந்து முடிந்துள்ளது. எனினும், வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்குரிய அடித்தளம் இடப்படவில்லை. தீர்வை வழங்குவதற்கு இந்த அரசாங்கமும் முனைப்பு காட்டவில்லை என்பதையே வரவு- செலவுத் திட்டம் எடுத்துக்காட்டுகின்றது.
வரவு- செலவுத் திட்டம் 10 பங்களாக இருந்தால் அதில் ஒன்றரை பங்கு பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பத்தில் அரை பங்குதான் கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. போர் இல்லாத சூழ்நிலையில் பாதுகாப்பு துறைக்கு ஏன் அதிக ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது? இதன்மூலம் உங்களின் உண்மை முகம் தெளிவாகின்றது.
