குழந்தைகளிடம் அத்துமீறினால் ஆண்மை நீக்கம் – சட்டம் நிறைவேற்றம்

மடகாஸ்கரில் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய அதிரடி சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான மடகாஸ்கர். இங்கு 2,80,00,000 (2.8 கோடி) மக்கள் வசிக்கின்றனர். இதனிடையே, மடகாஸ்கரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதைக் கருத்தில்கொண்டு மடகாஸ்கர் நாட்டில், சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்யும் நபர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும் எனும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி இச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மேலவையான செனட் சபை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் அந்நாட்டின் உயர் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்று பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்த உடன் சட்டம் அமலுக்கு வர உள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் மடகாஸ்கரில் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக 600 வழக்குப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் கடந்த ஒரு மாதத்தில் 133 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு உள்ளன. இதனால் இதற்கு கடுமையான சட்டம் வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, 10 வயதிற்குட்பட்ட குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்யும் நபர்களுக்கு அறுவைச்சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்யப்படும். அதேபோல், 10 முதல் 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்புணர்வில் ஈடுபடும் ஆண்களுக்கு அறுவைச்சிகிச்சை அல்லது ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படும்.

 

மேலும், 14 முதல் 17 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படும் எனும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆண்மை நீக்கம் மட்டுமின்றி,பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மடகாஸ்கர் அரசு கொண்டுவந்துள்ள இந்தச் சட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 

Related Articles

Latest Articles