இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே, கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக ஓய்ந்திருந்த போர், தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளதுஇரண்டாம் கட்ட போர்நிறுத்தம் குறித்து பேச்சு நடந்து வரும் நிலையில், பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 413 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023 அக்டோபரில் தாக்குதல் நடத்தினர்.
இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்; 200 பேரை பிணைக்கைதிகளாக கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் 48,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அமெரிக்கா மற்றும் ஐ.நா.,வின் முயற்சியால் இரு தரப்பிற்கும் இடையே கடந்த ஜனவரி 19 முதல் 42 நாட்களுக்கு முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமுல் செய்யப்பட்டது.
அப்போது, இரு தரப்பிலும் பிடித்து வைக்கப்பட்டிருந்த பிணைக்கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டன. இருப்பினும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இருதரப்பும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டின.
இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தொடர்பான பேச்சு நடந்து வருகிறது. இந்நிலையில், காசா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்ரேல் நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது.
வடக்கு காசா, காசா நகரம் மற்றும் டெய்ர் அல் – பலா, கான் யூனிஸ் மற்றும் காசா முனையின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளிலும், ரபா நகரிலும், இஸ்ரேல் விமானங்கள் வான்வழி தாக்குதல்கள் நடத்தின.
இதில், போரில் எஞ்சியிருந்த சில இடங்கள் அடியோடு அழிந்தன. பிரதான கட்டடங்கள் சேதமடைந்தன.
அகதிகள் அதிகம் இருந்த பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதால், பெண்கள், குழந்தைகள் உட்பட 413 பாலஸ்தீனியர்கள் இந்த தாக்குதலில் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகியான முகமது அபு வட்பாவும் பலியானார்.
மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
ரபாவில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் பலியானதாக, பாலஸ்தீன நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கான் யூனுசில் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதால், அப்பகுதியே போர்க்களமாக காட்சியளிக்கிறது. அங்குள்ள மருத்துவமனைகள் உயிரிழந்தவர்களின் சடலங்களால் நிரம்பி வழிகின்றன.
இரண்டாம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்த பேச்சின் போது, இஸ்ரேல் தரப்பில் வலியுறுத்தப்பட்ட நிபந்தனைகளுக்கு ஹமாஸ் ஒப்புதல் அளிக்காததை அடுத்து, இந்த தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.