குவைத் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற, பதுளை – ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் அங்கு நிர்க்கதியாகியுள்ளார். தான் நாடு திரும்புவதற்கு மலையக அரசியல் வாதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் உதவியை அவர் எதிர்பார்த்துள்ளார்.
பதுளை, ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த ஶ்ரீதேவி என்ற மூன்று பிள்ளைகளின் தாயே, இவ்வாறு உதவியை எதிர்பார்த்து காத்துள்ளார்.
இது தொடர்பில் குவைத்திலிருந்து ‘மலையக குருவி’யிடம் அவர் முக்கியமான சில தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
” குருணாகலையில் உள்ள ‘ஏஜன்ட்’ ஒன்றின் ஊடாக ஏப்ரல் மாதம் நான் குவைத் வந்தேன். வேலைக்கு சென்ற வீடு சரியில்லை. சாப்பாடுகூட வழங்கப்படவில்லை. பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் ஐந்து மாதங்கள் அங்கு வேலை செய்தேன்.
முடியாத கட்டத்தில் அங்கிருந்து வெளியேறினேன். தற்போது ‘ஏஜன்டில்’ தங்கியுள்ளேன். நாடு திரும்புவதற்காக என்னிடம் இருந்த பணத்தை எல்லாம் கொடுத்துவிட்டேன். இருந்தும் நாட்டுக்கு அனுப்பாமல் உள்ளனர். பதுளையை சேர்ந்த மற்றுமொரு பெண்ணும் உள்ளார். அவரும் அதே ஏஜன்ட் ஊடாக வந்தனர். மற்றைய மூவர் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
நாங்கள் நாடு திரும்ப வேண்டும், எங்கள் பிள்ளைகளை சந்திக்க வேண்டும். எனவே, எங்கள் அரசியல் வாதிகள் ஏதேனும் ஒரு வழியில் எங்களுக்கு உதவ வேண்டும்.” – என்றார் ஶ்ரீதேவி.










