பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் என்ற விடயத்தை கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து பிரித்து எடுக்கும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என்று இலங்கை தொழிலாளர் செங்கொடிச் சங்கம் தெரிவித்தது.
கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே சங்கத்தின் ஆலோசகர் மேனகா கந்தசாமி இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
இன்று கூட்டு ஒப்பத்தில் தொழிலாளர்களின் சம்பளம் என்ற விடயத்தை பிரித்து எடுத்து சம்பள நிர்ணய சபைக்கு மாற்றும் முயற்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. சம்பள நிர்ணய சபைக்கூடாக 1000 ரூபா சம்பளத்தை தீர்மானித்து வழங்கினாலும் கூட்டு ஒப்பந்தமும் தற்போது தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உள்ளடக்கியதாக கைச்சாத்திடப்பட வேண்டும்.
ஏனெனில் சம்பளம் தவிர்ந்த ஏனைய பல விடயங்கள் கூட்டு உப்பந்த்தில் உள்ளன என்பதை நாம் மறக்கக் கூடாது. எனவே தொழிலாளர்களின் உரிமையை கட்சி அரசியல் மயப்படுத்தாது விடயத்தை தொழில் உரிமை என்ற ரீதியில் நாம் பார்க்க வேண்டும்.
இந்த நாட்டின் அபிவிருத்திக்கு முதுகெழும்பாக இருக்கின்ற தோட்டத்தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்துவதை நிறுத்த வேண்டும். அதேநேரம் தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் போதெல்லாம் ஒருயுத்தமே நடக்கின்றது.
இது ஒரு வருடமோ இரண்டு வருடமோ அல்ல பல வருடங்களாக இடம்பெறும் ஒன்றாகும். இன்றைய வாழ்க்கைச் செலவு அடிப்படையில் பார்க்கும் போது 1000 ரூபா என்பது மிகச் சொற்பமான ஒரு தொகையாகும். ஒவ்வொறு முறையும் கம்பணிகள் இழுத்தடிப்பது ஏன்? தொழில் வழங்குர்கள் திட்மிட்ட அடிப்படையில் தொழிலாளர்கள் உரிமைகளை மீறுகின்றனர் என்பதையே இது காட்டுகின்றது.
மறு புறமாக தொழிலாளர் உரிமைகளை கட்சி அரசியலில் தவிக்கவிட முயற்சிக்கிறது. தொழிலாளர்களது உரிமைகள் மீறப்படுவதை தடுக்க கம்பனிகள் முயற்சிப்பதில்லை. உரிமை மீறல்களுக்கு அரசு துணைபோகாது அதனை தடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
மேலே சொன்ன பல்வேறு விடயங்களை கவனத்திற்கொண்டு இரண்டு பிரதான கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறோம். முதலாவதாக தொழிலாளர் அடிப்படை சம்பளம் 1000 ஆக இருப்பதுடன் அது உடனடியாகவும் முறையானவும் வழங்க வேண்டும்.
அடுத்ததாக தோட்டங்களை காடாக்கி கைவிடும் நிலையை உருவாக்குதல், தோட்டங்களை துண்டாடி விற்றல் போன்றவற்றைக் கைவிடுவதுடன் வேலைத்தளங்களில் தொழிலாளர்களுக்கான அடிப்படைத் தேவைகளான நீர் வசதியுடனான கழிவறை வசதிகள் போன்றன செய்துகொடுத்தல், உணவு சாப்பிட பிரத்தியேக இடம் அமைத்தல், முதலியவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் இன்று அறிமுகப்படுத்தப்பட்டு வரும் முறைசாரா முறைகளுக்கான தீர்வு என்பன கூட்டு ஒப்பந்த்தில் உள்ளடக்கப்பட வேண்டும். என்றார்.










