” பெருந்தோட்ட நிறுவனங்களால் மக்களுக்கு நன்மைகள் நடப்பதில்லை. தொழிலாளர் விடயத்தில் நியாயமாக நடந்து கொள்ளாததால்தான் மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக நாங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கினோம். தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் எதிர்காலத்தில் ஏனைய பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராகவும் மேற்கொள்வோம்.” – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அரச வருமானம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாங்கள் மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்திற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டோம். ஏனெனில் பெருந்துட்ட நிறுவனம் கடந்த வருடம் 4,570 மில்லியன் ரூபா வருமானத்தை எட்டியிருக்கிறது. அதில் 522 மில்லியன் இலாபமாகும் . ஆனால் மக்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை. அவர்களின் E.P.F ,E.T.F முறையாக செலுத்தப்படவில்லை. மேலும் எந்த சலுகைகளையும் வழங்கவும் இல்லை. அதனால் தான் இந்த நிறுவனத்தில் இருந்து தேயிலை தூளை வெளியில் கொண்டு செல்ல மாட்டோம் என தீர்மானம் ஒன்றை மேற்கொண்டோம்.
தொழிற்சங்கங்களுக்கு எதிராக அந்த நிறுவனம் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தது. அதே நேரம் மஸ்கெலியா நிறுவனத்தை ஒன்றும் பண்ண முடியாது என சிலர் தெரிவித்தனர். ஆனால் மஸ்கெலியா நிறுவனத்தில் இருந்து ஒரு கிராம் தேயிலை தூளை கூட வெளியில் கொண்டு செல்லப்படவில்லை. அதனால் அந்த நிறுவனம் பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கின்றது.
ஏனெனில் தொழிற்சங்க நடவடிக்கையால் அவர்களின் வயிற்றுக்கு அடி விழுந்துள்ளது. தொழிலாளர்களை ஏமாற்றிய காலம் முடிந்துவிட்டது. மஸ்கெலியா நிறுவனம்போல, ஏனைய நிறுவனங்களுக்கு எதிராகவும் நாம் நடவடிக்கையில் இறங்குவோம்.
அத்துடன், பெருந்தோட்ட நிறுவனங்களின் கெடுபிடிகளில் இருந்து, தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து, கூட்டு தொழிற்சங்க நடவடிக்கை குழுவொன்றை அமைக்க வேண்டும் என யோசனை முன்வைக்கின்றேன்.” – என்றார்.