ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மூவரடங்கிய குழுவொன்றை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன, பொதுச் செயலாளர் சட்டத்தரணி தலதா அத்துக்கோரல, ஜனாதிபதி சட்டத்தரணி ரோலண்ட் பெரேரா ஆகியோரே இந்த மூவரடங்கிய குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இலங்கையின் ஜனநாயகப் பல கட்சி முறைமையைப் பாதுகாப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடைக்குக் கொண்டு வருவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்பதை மீண்டும் வலியுறுத்துவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியுடன் அரசியல் மற்றும் கொள்கை ரீதியாக இணைந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு மற்றும் முகாமைத்துவக் குழு கடந்த வாரம் ஏகமனதாக அனுமதியளித்தது. இதற்கு முன்னர் இரு சந்தர்ப்பங்களில் கூடிய ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவக் குழுட்டத்திலும் இந்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அதற்கமைய குறித்த யோசனைக்கு செயற்குழுவிலும் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த 9ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கொழும்பில் கூடியது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஏனைய சகல உறுப்பினர்களது பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் ஐ.தே.க.வுடன் இணைந்து செயற்படுவதற்கு ஏகமனதாக அனுமதி வழங்கப்பட்டது.
