” எழுத்துமூல அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டியதில்லை, அரச வதிவிடத்திலிருந்து மஹிந்த ராஜபக்ச வெளியேறலாம்.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
எழுத்துமூலம் அறிவிப்பு விடுத்தால் அரச மாளிகையிலிருந்து வெளியேறத் தயார் என மஹிந்த ராஜபக்ச விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” முன்னாள் ஜனாதிபதி அல்லது அவரின் பாரியாருக்கு பொருத்தமான வீடொன்று வழங்கப்படாவிட்டால் ஓய்வூதிய கொடுப்பனதில் மூன்றிலொரு பங்கு வழங்கப்பட வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மஹிந்தவால் புரிந்துகொள்ள முடியும் என நம்புகின்றோம்.
எனவே, அறிவிப்பு விடுக்கும்வரை காத்திருக்க வேண்டியதில்லை. வெளியேறலாம்.
பொருத்தமான வீடென்பதன் பொருள் 46 லட்சம் ரூபா பெறுமதியான வீடு அல்ல. அரசாங்கத்துக்கு வழங்கக்கூடிய வீடாக அது இருக்க வேண்டும். தேவையேற்படின் வாடகை பணத்தை செலுத்தி இருக்கலாம். மஹிந்தவுக்கு மூன்று மகன்மார் இருப்பதால் தந்தையை பராமரிப்பதில் சிக்கல் இருக்காது என கருதுகின்றோம்.
மஹிந்தவுக்கு மட்டுமல்ல முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இது பொருந்தும்.
அமைச்சர்கள் உட்பட அரசியல்வாதிகளின் வீடுகள் தொடர்பிலேயே நாம் தீர்மானம் எடுப்போம். அரசாங்க அதிகாரிகளின் வீடுகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவில்லை. இது தொடர்பில் நாமல் ராஜபக்ச பொய்யுரைத்துள்ளார். அரசாங்க அதிகாரிகளின் வீடுகள் தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.” – என்றார்.










