மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உக்குவளை பகுதி வீடு ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதேச சபை உறுப்பினர் உட்பட இருவரை சந்தேகத்தின் பேரில் மாத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு உக்குவளை குருளவௌ பகுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தன்று குறித்த வீட்டின் பின்புறமாக வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த கேஸ் சிலிண்டர், தொலைக்காட்சிப் பெட்டி, மின்விசிறி மற்றும் பல பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருடப்பட்ட பொருட்கள் கடை ஒன்றில் சந்தேகநபர்களால் அடகு வைக்கப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரிய வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். திருட்டுச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரதேசசபை உறுப்பினர் உட்பட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாத்தளை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி திலகரத்ன தெரிவித்தார் .