கொவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு திட்டங்களையும் அவர்களுக்கு தேவையான வசதிகளையும் செய்துகொடுக்காமல் சில எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் நாடகம் நடத்துவது வேதனை அளிக்கிறது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் பிரஜாசக்தி அபிவிருத்தி செயல் திட்டத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
மத்திய மாகாண கோவிட்19 கட்டுப்படுத்தும் குழு கூட்டம் இன்று மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மத்திய மாகாணத்தில் இதுவரை 1,375 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் கண்டி மாவட்டத்தில் 811 ,மாத்தளை மாவட்டத்தில் 373, நுவரெலியா மாவட்டத்தில் 241 மரணங்களும் பதிவாகியுள்ளன.
நாடு எதிர்நோக்கியுள்ள இந்த அசாதாரண சூழ்நிலையில் மத்திய மாகாணத்தில் தடுப்பூசிகள் வழங்கும் செயல்திட்டம் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் செயல்திட்டம் மிகவும் துரித கதியில் இடம் பெற்றதன் காரணமாக பாதிப்பை ஏனைய மாகாணங்களை பொருத்தவரையில் நாம் கட்டுப்படுத்தி உள்ளோம்.
கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ள மரணங்களில் அறுபது வயதுக்கு மேற்பட்டோரின் இழப்பை அதிகமாக காணப்படுகிறது. இதுவரையில் 832527 முதலாம் கட்ட தடுப்பூசிகளும் 519494 இரண்டாம் கட்ட தடுப்பூசிகளும் ஆக மொத்தமாக 1352021 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 11 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் செப்டம்பர் மாத நடுப்பகுதியில் வழங்கி முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஸ்புட்னிக் தடுப்பூசிகள் சம்பந்தமாக கேள்வி எழுப்பிய பாரத் அருள்சாமி புதிதாக வழங்கப்படவுள்ள பதினையாயிரம் தடுப்பூசிகளை முதல்கட்ட தடுப்பூசிகள் பெற்றவர்களுக்கு வழங்குமாறும் அதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விசேட கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
இதன்போது தெரிவித்த வைத்திய நிபுணர்கள் முதலாம் கட்ட ஸ்புட்னிக் தடுப்பூசிகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு மூன்று வாரம் தொடக்கம் ஆறு மாதம் வரையிலான காலப்பகுதிக்கு அத் தடுப்பூசிவீரியம் கொண்டதாக செயல்படும் எனவே துரிதகதியில் தங்களுக்கு கிடைக்கும் தடுப்பூசிகளை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 11490 நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளார்கள். 141 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் 81% அதிகமானோர் 60 வயதிற்கு மேற்பட்டோர்.










