‘கொரோனா பரவல் தீவிரம்’ – மாத்தளையில் அவசரகால நடவடிக்கை முன்னெடுப்பு

மாத்தளை நகரில் கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்திட அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மாநகர முதல்வர் சந்தனம் பிரகாஷ் தெரிவித்தார். மாத்தளை மாநகர சபை மாதாந்த பொது கூட்டம் நேற்று (17.08.2021) மாத்தளை மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த மாநகர முதல்வர் சந்தனம் பிரகாஷ்,

தற்பொழுது கொரோனா வைரஸ் நாட்டில் வேகமாக பரவி பல உயிர்களை காவுகொண்டு வரும் நிலையில் அரசாங்கமும் இதை கட்டுப்படுத்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. கொரோனா வைரஸ் தற்போது மாத்தளையில் சுமார் 40ற்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனடிப்படையில் மாத்தளை மாநகர சபை எல்லைக்குள் இருக்கும் 13 வட்டாரங்களையும் உள்ளடக்கியவாறு சுகாதார சிகிச்சைப் பிரிவுகளை அவசரமாக நிர்மாணித்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். இந்த ஒவ்வொரு சிகிச்சை பிரிவும் மாத்தளை மாநகர ஆணையாளரின் நேரடி கண்காணிப்பில் 24 மணி நேரமும் இயங்கிட வேண்டும். நோயாளிகளுக்கும் பொது மக்களுக்கும் மற்றும் மாநகர சபை சுகாதார பிரிவுகளுக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்காக 24 மணிநேர தொலைபேசி தொடர்புகளும் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இந்த ஒவ்வொரு சிகிச்சை பிரிவிலும் ஆண், பெண் சுகாதார உத்தியோகத்தர்களை பணியில் அமர்த்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மாத்தளை மாநகர சபை ஆணையாளரின் நேரடி கண்காணிப்பில் மாத்தளை மாநகர சபை எல்லைக்குள் கொரோனா தொற்றாளர்களின் நலன் கருதி விஷேட அம்பியூலன்ஸ் 24 மணி நேர சேவையையும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொருவரும் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் எனவும் தேவையற்ற காரணங்களுக்கெல்லாம் வீடுகளை விட்டு வெளியே வந்து தொற்றாளர்களாக மாறிவிட வேண்டாம் என அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles