கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மற்றும் கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் தொடர்பான உண்மைத் தகவல்களை அரசு மறைக்கின்றது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாட்டில் இன்று கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகின்றது. முழு நாடும் மரண பீதியில் உள்ளது. நாளாந்த பலி எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது. எனினும், அரசால் வெளியிடப்படும் தகவல்கள் உண்மை இல்லை என்ற தகவலை பொறுப்புடன் கூறுகின்றேன். தொற்றாளர்கள் மற்றும் கொரோனா மரண எண்ணிக்கையின் அளவு இதைவிடவும் அதிகமாகவே இருக்கக்கூடும். கம்பஹா மாவட்ட செயலணிக்கூட்டத்தின்போது இந்த விடயம் உறுதியானது.
தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து காண்பித்து, நாம் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்திவிட்டோம் என காண்பிப்பதற்கான கீழ்த்தரமான முயற்சி எடுக்கப்படுகின்றது. இதன்படி கொரோனாவால் வீட்டில் உயிரிழந்தால்கூட அதனை கொரோனா மரணத்துடன் சேர்க்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் வைத்து கொரோனாவால் மரணிக்கும் பட்சத்தில் இதய நோய் அல்லது சிறுநீரக நோயினால் ஏற்பட்ட மரணம் என்றே காண்பிக்கப்படும் நிலை காணப்படுகின்றது. இவ்வாறான நடவடிக்கை தவறு. எனவே, சுகாதார தரப்பினரால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை ஏற்று, காத்திரமான முடிவுகளை அரசு எடுக்க வேண்டும்.
உக்ரைன் நாட்டு பிரஜைகளை அனுமதித்ததாலேயே நாட்டில் 2ஆவது அலை உருவானது. தற்போது ரஷ்ய நாட்டு பிரஜைகளை நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது.” – என்றார்.










